எல்லை மோதல் விவகாரம்; நாட்டின் சுய மரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்து கொள்ளமாட்டோம்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்


எல்லை மோதல் விவகாரம்; நாட்டின் சுய மரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்து கொள்ளமாட்டோம்:  ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2020 10:52 PM IST (Updated: 19 Dec 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில் சுய மரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்து கொள்ளமாட்டோம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

சீனாவுடனான எல்லை மோதல் விவகாரம் பற்றி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், அமைதியையே விரும்புகிறோம். ஆனால் நாட்டின் சுய மரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்து கொள்ளமாட்டோம் என கூறினார்.

தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள துண்டிக்கல் விமான படை நிலையத்தில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு இன்று நடைபெற்றது.  இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் லடாக்கில் இந்தியா, சீனா இடையே நிலவும் மோதல் போக்கு பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:–

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் அணுகுமுறையானது, அந்த நாட்டின் நோக்கங்களை பிரதிபலிக்கிறது.  ஆனால் நாம் பலவீனமாக இல்லை என்பதை காட்டி உள்ளோம்.  இது புதிய இந்தியா. எந்த விதமான அத்துமீறல், ஆக்கிரமிப்பு அல்லது ஒருதலைப்பட்சமான செயல்களுக்கு பொருத்தமான பதிலடியை இந்த புதிய இந்தியா கொடுக்கும்.

இந்த விவகாரத்தில் இந்தியா பாராட்டுகளை பெற்றுள்ளது. பல நாடுகளின் ஆதரவையும் இந்தியா கண்டறிந்துள்ளது.  இரு தரப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு பல கட்டங்களாக ராஜ தந்திர ரீதியிலும், ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருக்கின்றன. ஆனாலும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. அமைதியை விரும்புகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஆனால், நாட்டின் சுயமரியாதைக்கு எந்த பங்கம் ஏற்படுவதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.  எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க நாடு தயாராக இருக்கிறது.

மேற்கு பகுதியை பொறுத்தமட்டில் எல்லைகளில் பாகிஸ்தான் மோதல்களில் ஈடுபடுகிறது. 4 போர்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளபோதும், பயங்கரவாதிகளை கொண்டு மறைமுகப்போரில் அந்த நாடு ஈடுபடுகிறது. பயங்கரவாதத்தை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் திறமையாக கையாளுகின்றனர்.

நாடு பயங்கரவாதத்தை உள்நாட்டில் மட்டுமல்ல, எல்லைகளுக்கு அப்பாலும் திறம்பட கையாள்கிறது. நடவடிக்கை எடுக்கிறது. பாகிஸ்தானில் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நாம் நடத்திய தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான நமது உறுதியான நிலைப்பாட்டையும், இந்தியாவின் ராணுவ வலிமையையும் உலகுக்கு நிரூபித்து காட்டியது.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story