எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயார் - ராகுல் காந்தி கூறியதாக தகவல்


எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயார் - ராகுல் காந்தி கூறியதாக தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2020 11:10 AM IST (Updated: 20 Dec 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி எந்தப் பொறுப்பை வழங்கினாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, ராகுல்காந்தி கூறியிருப்பதற்கு, மூத்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகளுக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளிலேயே  தலைமை பதவியை தூக்கி எறிந்த ராகுல் காந்தியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசி தரூர், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி ஒரு மிகப் பெரிய குடும்பம் என்றும், இதனை பலப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், ராகுல் காந்தியே கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை வழி நடத்தவும் பிரதமர் மோடிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளவும் ராகுல் காந்தி தான் சரியான நபர் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய தலைவரை தேர்வு செய்வதை தேர்தல் நடைமுறைக்கே விட்டு விடுவதாகவும், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை பலமுறை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது பற்றி வாய் திறக்காத ராகுல் காந்தி முதன் முறையாக தமது மவுனத்தை, கலைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே, பொறுப்பேற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா 99.9 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story