காற்று மாசை குறைக்க புதிய முயற்சி: பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தோட்டம் அமைத்த அதிகாரி


காற்று மாசை குறைக்க புதிய முயற்சி:  பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தோட்டம் அமைத்த அதிகாரி
x
தினத்தந்தி 20 Dec 2020 10:36 AM GMT (Updated: 20 Dec 2020 10:36 AM GMT)

பஞ்சாப்பில் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு 500க்கும் மேற்பட்ட தோட்டங்களை அமைத்து வருமான வரி துறை அதிகாரி ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.

லூதியானா,

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.  இது தவிர்த்து காற்று மாசுபாடும் அதிகரித்து உள்ளது.  கொரோனா பாதிப்புகளால் அரசு பிறப்பித்த ஊரடங்கால் ஓரளவு காற்று மாசு குறைந்தது.  காற்று தர குறியீடு அளவும் நன்றாக இருந்தது.

இதேபோன்று கங்கை உள்ளிட்ட ஆறுகள் தெளிந்த நீரோட்டத்துடன் காணப்பட்டன.  சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் டெல்லி அரசு வாகன கட்டுப்பாடு கொண்டு வந்தது.  எனினும் ஊரடங்கு தளர்வுக்கு பின், தொழிற்சாலை கழிவுகள், வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றால் காற்று மாசு அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப்பில் வருமான வரி துறையில் கூடுதல் ஆணையாளராக உள்ள அதிகாரி ரோகித் மெஹ்ரா என்பவர் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, கழிவு பொருட்களாக மீந்து போன, பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தோட்டங்கள் அமைப்பது என்று முடிவு செய்துள்ளார்.  பஞ்சாப்பின் லூதியானா நகரில் காற்று மாசை எதிர்கொள்ளும் நோக்கில் ஒன்றன் மேல் ஒன்றாக பாட்டில்களை அடுக்கி அதில் செடிகளை வளர்த்து தோட்டங்களாக மாற்றியுள்ளார்.

இதுபற்றி கூறும் மெஹ்ரா, பயன்படுத்தப்பட்ட பின்னர் கழிவாக தூக்கி எறியப்படும் 70 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பாட்டில்களை நாங்கள் சேகரித்து உள்ளோம்.  அவற்றை கொண்டு குறுக்கு வடிவில் தோட்டங்களை அமைத்து உள்ளோம்.

காற்று மாசை குறைப்பதற்கு ஏதுவாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.  பொது இடங்களில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட தோட்டங்களை நாங்கள் இதுவரை அமைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Next Story