மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்: அமித்ஷா பேச்சு


மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்:  அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 20 Dec 2020 5:02 PM IST (Updated: 20 Dec 2020 5:02 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள் என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடும் என கூறப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளம் புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர், மேற்கு வங்காளத்தின் பச்சிம் மேதினிப்பூர் நகரில் நேற்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் 3 தசாப்தங்களாக ஆட்சி செய்தது.  கம்யூனிஸ்டு கட்சிக்கு 27 ஆண்டுகளும், சகோதரி மம்தாவுக்கு 10 ஆண்டுகளும் மக்களாகிய நீங்கள் ஆட்சி அதிகாரம் வழங்கினீர்கள்.  பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள்.  தங்கம் போன்ற மாநிலம் ஆக மேற்கு வங்காளம் உருமாற்றப்படும் என பேசினார்.

இதேபோன்று 2வது நாளான இன்று மந்திரி அமித்ஷா மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.  இந்த பேரணியானது, அனுமன் ஆலய மைதான சாலையில் தொடங்கி போல்பூர் சர்க்கிள் பகுதியில் முடிவடையும்.  இதில், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

இந்த பேரணியில் பொதுமக்களிடையே மத்திய மந்திரி அமித்ஷா பேசும்பொழுது, என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரணியை நான் பார்த்ததேயில்லை.  இந்த பேரணியானது, பிரதமர் மோடி மீது வங்காள மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிகாட்டுகிறது.

மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்.  சகோதரி மம்தா மீது வங்காள மக்கள் கொண்டுள்ள கோபம் இந்த பேரணியில் வெளிப்பட்டு உள்ளது என்று பேசியுள்ளார்.  நரேந்திர மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.  நாங்கள் 5 ஆண்டுகளில் தங்கம் போன்ற வங்காளம் உருவாக்கிடுவோம் என்று அவர் பேசியுள்ளார்.

Next Story