வேளாண் சட்ட ஆதரவு: டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்ட உத்தர பிரதேச விவசாயிகள்


வேளாண் சட்ட ஆதரவு:  டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்ட உத்தர பிரதேச விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Dec 2020 5:42 PM IST (Updated: 20 Dec 2020 5:42 PM IST)
t-max-icont-min-icon

அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

காசியாபாத்,

விவசாயிகளின் நலன்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதி, டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டம் 3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  அரசுடனான பலசுற்று பேச்சுவார்த்தை பலனற்று தோல்வியில் முடிந்தது.  இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.

எனினும், அவற்றை ஏற்க மறுத்து விவசாயிகளின் போராட்டம் இன்று 25வது நாளை எட்டியுள்ளது.  இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளில் ஒரு தரப்பினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்து மஜ்தூர் விவசாய சமிதி என்ற வேளாண் அமைப்பினை சேர்ந்த விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பர்த்தாபூர் பகுதியில் இருந்து, காசியாபாத் நகரின் இந்திராபுரம் நோக்கி டிராக்டர்களில் பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் தங்களது வாகனங்களில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பேனர்களை கட்டி வைத்தும், தேசிய கொடியை வாகனங்களின் முன்புறம் பறக்க விட்டபடியும் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story