கொரோனா தொற்று: இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சமாக சரிவு
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 5 ஆயிரமாக சரிவு அடைந்துள்ளது.
புதுடெல்லி,
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு இருந்தாலும், தற்போது நிலைமை மாறி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான போராட்டம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் 80 ஆயிரம், 90 ஆயிரம் என்ற அளவுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலை மாறி, இப்போது தொடர்ந்து 25 ஆயிரம் முதல் 30 ஆயிரத்துக்குள்தான் பாதிப்பு என்ற அளவுக்கு பரவல் குறைந்துள்ளது.
அந்த வகையில் இன்று ஒரு நாளில் 26 ஆயிரத்து 624 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு என்பது 1 கோடியே 31 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து இருக்கிறது.
புதிதாக கேரள மாநிலத்தவர்தான் அதிகபட்சமாக 6,293 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மராட்டியத்தில் 3,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 21வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழே பதிவாகி இருக்கிறது.
அதே நேரத்தில் தற்போது ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனாவுக்கு ஆளாவோர் எண்ணிக்கையை விட அதில் இருந்து விடுபடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கும் அம்சமாக உள்ளது.
இன்றும்கூட புதிதாக 26 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட வேளையில், 29 ஆயிரத்து 690 பேர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரம் அதிகம் ஆகும்.
ஒரே நாளில் கேரளாவில் அதிகபட்சமாக 4,749 பேரும், மராட்டியத்தில் 3,119 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,717 பேரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் மீட்பு சதவீதம் என்பது 95.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை மீட்கப்பட்டோர் எண்ணிக்கையும் 95 லட்சத்து 80 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரு நாள் கொரோனா உயிர்ப்பலி 341 ஆக பதிவாகி உள்ளது. 10 மாநிலங்கள், ஒரு நாள் உயிர்ப்பலியில் 81.23 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கின்றன. மராட்டியத்தில் அதிகபட்சமாக 74 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் 43 பேரும், டெல்லியில் 32 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 477 ஆக அதிகரித்து இருக்கிறது. 48 ஆயிரத்து 648 உயிரிழப்புகளை சந்தித்துள்ள மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 12 ஆயிரத்து 4 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள். தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில் டெல்லியில் 10 ஆயிரத்து 251 பேரும், மேற்கு வங்காளத்தில் 9,320 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,177 பேரும், ஆந்திராவில் 7 ஆயிரத்து 74 பேரும், பஞ்சாப்பில் 5,189 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது 3 லட்சத்து 5 ஆயிரம் பேர் மட்டுமே பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையை தொடர்கின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.04 சதவீதம் மட்டும்தான் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
3.05 லட்சம் பேரில், 66 சதவீத பங்கை மராட்டியம், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.