கடும் குளிருக்கு மத்தியிலும் தொடர்ந்து 26-வது நாளாக விவசாயிகள் போராட்டம்: எப்போது முடிவுக்கு வரும் என டெல்லிவாசிகள் தவிப்பு
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் 26-வது நாளை எட்டி உள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகளும், அதற்கு அழுத்தம் தரவே கூடாது, வேண்டுமானால் திருத்தங்கள் செய்யலாம் என மத்திய அரசும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர்.
இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. வாட்டியெடுக்கும் குளிர்கூட விவசாயிகளை போராடுவதில் இருந்து தடுக்க முடியவில்லை.
டெல்லியில் நேற்று வெப்ப நிலை மிக குறைந்த அளவாக 3.4 டிகிரி செல்சியஸ் என பதிவானது. கடும்குளிர் காற்று நடுங்க வைத்தது.
டெல்லி வானிலை நிலவர தரவுகளை வழங்கும் சப்தர்ஜங் ஆய்வகம்தான் 3.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை பதிவு செய்தது. இது இயல்பை விட 5 புள்ளிகள் குறைவு என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் 25 நாளாக நடந்து வருவது, டெல்லி பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் தொடங்கியநாள் முதல் டெல்லி போக்குவரத்து போலீஸ் துறை சில சாலைகளை மூடுவது பற்றி, பயணிகளுக்கு எச்சரிக்கை விடுவதற்காக டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுகிறது. மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை கூறி வருகிறது.
திக்ரி மற்றும் தன்சா எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஜாட்டிகாரா எல்லை மட்டும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காகவும், நடந்து செல்கிறவர்களுக்காகவும் திறந்திருக்கிறது.
அரியானா செல்வோருக்கு சில எல்லைகள் திறந்துள்ளன. நொய்டா, காசியாபாத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. டெல்லிக்கு வருவோர் ஆனந்த்விகார், டி.என்.டி., அப்சரா, போப்ரா என மாற்று எல்லைகளை பயன்படுத்த வேண்டியதிருக்கிறது.
சிங்கு, அச்சந்தி, பியாவ் மணியாரி, சபோலி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பயணிகள் லம்பூர், சபியாபாத் மற்றும் சிங்கு பள்ளி சுங்க வரி எல்லைகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
உயிரை உறைய வைக்கும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story