விவசாயிகள்-போலீஸ் மோதல் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது - ராகுல் காந்தி கருத்து


விவசாயிகள்-போலீஸ் மோதல் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது - ராகுல் காந்தி கருத்து
x
தினத்தந்தி 26 Jan 2021 8:27 PM GMT (Updated: 26 Jan 2021 8:27 PM GMT)

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச்சென்று, செங்கோட்டைக்குள் நுழைந்து, அதன் குவிமாடங்களில் கொடிகளை ஏற்றினர்.

முன்னதாக அவர்கள் டெல்லியின் லூட்யென்ஸ் பகுதிக்குள் நுழைய முற்படுகையில் போலீசாருடன் மோதவே, அவர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து, தடியடி நடத்துகிற நிலை உருவானது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

அதில் அவர், “எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. யாராவது ஒருவர் காயம் அடைந்தாலும், பாதிப்பு நமது நாட்டுக்குத்தான். தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள” என கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “புதிய இந்தியாவில் 2021-ம் ஆண்டு குடியரசு தினம். அரசு தனது சொந்த மக்களை தாக்கியதால் தேசிய தலைநகரத்தில் புகை எழுந்துள்ளது” என கூறி உள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியதால் புகை எழுந்த காட்சி தொகுப்பையும் அந்த பதிவில் காங்கிரஸ் கட்சி இணைத்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் கண்டனம் தெரிவித்தார்.

Next Story