விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரி 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினம் அன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதற்காக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய எல்லைகளில் சுமார் 1 லட்சம் டிராக்டர்களுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.
பின்னர் போலீசார் அனுமதி அளித்த நேரத்துக்கு முன்னரே, அனுமதிக்காத சாலைகளின் வழியாக பேரணியை நடத்தினர். இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரின் எதிர்ப்பை மீறியும், காங்கிரீட், இரும்பு தடுப்பு வேலிகளை டிராக்டர்கள் மூலம் உடைத்துக்கொண்டும் அவர்கள் முன்னேறினர்.
இது ஒருபுறம் இருக்க காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் சட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இதை தொடர்ந்து விடியோ ஆதாரங்களை கைப்பற்றிய டெல்லி காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரி ஈஷ் சிங்கால் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி காவல்துறை அதிகாரி ஈஷ் சிங்கால் கூறியதாவது:-
ஜனவரி 26-ல் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 128 பேரை கைது செய்துள்ளோம். இது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம், யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை யாரையும் சட்ட விரோதமாக கைது செய்யவில்லை. இது தொடர்பாக பரவும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story