மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 979 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 979 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 2 Feb 2021 10:07 AM IST (Updated: 2 Feb 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின் சென்செக்ஸ் குறியீடு 979.87 புள்ளிகள் உயர்ந்து 49,580.48 ஆக காணப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.  இந்த பட்ஜெட்டில் வேளாண், வங்கி, கல்வி,  ரெயில்வே, கப்பல், பேருந்து போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
 
இந்த பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு நேற்று வர்த்தகத்தின் இடையே 1,800 புள்ளிகள் உச்சம் தொட்டு 48,172.85 ஆக காணப்பட்டது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தகத்தின் நடுவே, 493 புள்ளிகள் உயர்ந்து 14,128 ஆக இருந்தது.

இந்த பட்ஜெட்டில் வங்கி பிரிவில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கடந்த வெள்ளி கிழமையுடன் முடிவடைந்த வங்கிக்கான நிப்டி குறியீட்டில் இருந்து 3.2 சதவீதம் அளவுக்கு நேற்று பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இவற்றில் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்கு விலை உச்சமடைந்து அதிக அளவாக 9.5 லாப சதவீதத்துடன் காணப்பட்டது.  இதேபோன்று பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 4 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு விலை 6.36 சதவீதமும், எச்.டி.எப்.சி. மற்றும் பெடரல் வங்கியின் பங்கு விலை 2 சதவீதமும் உயர்ந்து லாபத்துடன் காணப்பட்டன.

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின் சென்செக்ஸ் குறியீடு 979.87 புள்ளிகள் உயர்ந்து 49,580.48 ஆக காணப்படுகிறது.  தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 356 புள்ளிகள் உயர்ந்து 14,634 ஆக உள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், பட்ஜெட் எதிரொலியாக 2வது நாளாக பங்கு சந்தை உயர்ந்து காணப்பட்டது.  இந்நிலையில், சென்செக்ஸ் குறியீடு 49,945.91 ஆக உயர்ந்து 50 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை நெருங்கியுள்ளது.

Next Story