கொரோனா தடுப்பூசி போடும் செலவில் 82 சதவீதத்தை ஏற்ற ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம்


கொரோனா தடுப்பூசி போடும் செலவில் 82 சதவீதத்தை ஏற்ற ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம்
x
தினத்தந்தி 3 Feb 2021 12:03 AM IST (Updated: 3 Feb 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீதத்தை ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம் ஏற்றுள்ளது.

பி.எம்.-கேர்ஸ்
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா கால நிவாரண உதவிக்காக, ‘பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் (பி.எம்.-கேர்ஸ்)’ உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் இருக்கிறார். ராணுவ மந்திரி, உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமர் அலுவலகம் இதை நிர்வகிக்கிறது.

தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்பட பலதரப்பினரிடம் இருந்து நன்கொடைகள் திரட்டப்பட்டன. ஆனால், எவ்வளவு நிதி திரட்டப்பட்டது என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிடவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த போதிலும், மத்திய அரசு தகவல் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால், இந்த நிதியம் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

ரூ.35 ஆயிரம் கோடி
இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள அடுத்த நிதியாண்டுக்கான ஒதுக்கீடு ஆகும்.

அதிகாரி விளக்கம்
அப்படியானால், இப்போது தடுப்பூசிக்கான செலவை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசின் செலவினங்கள் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் பதில் அளித்துள்ளார். அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வருவதற்கு முன்பே, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, தடுப்பூசிக்கென நிதி ஒதுக்கப்படவில்லை.

செலவை ஏற்றது
இருப்பினும், கடந்த ஜனவரி முதல் வருகிற மார்ச் மாதம்வரை, தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுள்ளது. மேற்கண்ட 3 மாதங்களுக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 700 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், மத்திய சுகாதார அமைச்சகம் ரூ.480 கோடி அளித்துள்ளது. மீதி ரூ.2 ஆயிரத்து 220 கோடியை, அதாவது 82 சதவீத தொகையை ‘பி.எம்.-கேர்ஸ்’ ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story