மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ; பொருட்கள் எரிந்து நாசம்
கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
படப்பிடிப்பு செட்டில் தீ
மும்பை கோரேகாவ் பாங்குர் நகரில் லட்சுமி பார்க் வளாகத்தில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் பாகுபலியில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிக்கும், ஆதிபுருஷ் என்ற சினிமா படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் நேற்று காலை அங்கு படப்பிடிப்பு நடந்தது. பின்னர் மாலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், 4 மணியளவில் செட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்தநிலையில் தீ மள, மளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலமானது.
பொருட்கள் எரிந்தன
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 8 வாகனங்கள் மற்றும் 6 வாட்டர் டேங்கர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி செட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் முழுமையாக எரிந்து நாசமானது. அங்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயில் கருகின.
எனினும் அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓம் பிரகாஷ் இயக்கும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சயீப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் விபத்து நடந்த போது படப்பிடிப்பு தளத்தில் இல்லை என கூறப்படுகிறது. ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story