குடியரசு தின வன்முறை: 14 டிராக்டர்கள் பறிமுதல் - டெல்லி காவல்துறை தகவல்
குடியரசு தின வன்முறை தொடர்பாக 14 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 123- பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை சேகரித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, டிராக்டர் பேரணியின் போது ஒப்புக்கொண்ட வழிதடத்தில் இருந்து விலகி மாற்று வழியில் செல்ல விவசாயிகள் சிலர் முயன்றதாக கூறப்படுகிறது. இவர்களை தடுப்பதற்காக போலீசார் தடுப்புகளையும், பேருந்துகளையும் நிறுத்தி வைத்திருந்தனர்.
ஆனால், அவற்றை டிராக்டர் மூலமாக இடித்துத் தள்ளி முன்னேறி சென்றனர். அவ்வாறு போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிய 14 டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 80க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். டிராக்டர்களில் உரிமையாளர்களுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story