வேளாண் சட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்பு
விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மாநிலங்களவையில் கூடுதல் நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே வேளாண் சட்ட விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநிலங்களவையில் நேற்று கடும் அமளி நடந்தது. இதனால், சில முறை ஒத்திவைக்கப்பட்டு பின், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.
பின்னர், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை சிறிதுநேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமுன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நடவடிக்கை எடுத்தார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கேள்வி நேரத்தை ரத்து செய்து வேளாண் சட்டம் தொடர்பாக விவாதிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் அறிவித்தார். அதன்படி வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க 15 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. இதனைத் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story