பெங்களூருவில் தனியார் கல்லூரியில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை; சக மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
பெங்களூருவில் தனியார் கல்லூரியில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் கல்லூரியில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மாணவர் தற்கொலை
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த் ரெட்டி (வயது 22). இவர், பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தொட்ட பொம்மசந்திராவில் தங்கி இருந்து அவர் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்திருந்தார். இந்த நிலையில், காலை 9.30 மணியளவில் கல்லூரியின் 7-வது மாடிக்கு சென்றார். பின்னர் 7-வது மாடியில் இருந்து ஜெயந்த் ரெட்டி கீழே குதித்தார்.
இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி உடனடியாக வி.வி.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜெயந்த் ரெட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடிதம் சிக்கியது
தற்கொலை செய்வதற்கு முன்பாக ஜெயந்த் ரெட்டி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை தனது சட்டையில் அவர் வைத்திருந்தார். அந்த கடிதத்தில் தினம் தினம் சாவதை விட ஒரே நாளில் உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று ஜெயந்த் ரெட்டி எழுதி வைத்திருந்தார். ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி கல்லூரி முதல்வர் அஸ்வத் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. மாணவர் ஜெயந்த் ரெட்டி திறமைசாலி. அவர் நன்றாக படிக்க கூடியவர். டிப்ளமோவில் 94 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, என்ஜினீயரிங் சேர்ந்திருந்தார். மாணவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது, என்றார்.
மாணவர்கள் போராட்டம்
இதற்கிடையில், மாணவர் ஜெயந்த் ரெட்டி தற்கொலை செய்திருப்பதற்கு எதிராக அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சக மாணவர்கள் கூறினார்கள். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சமாதானமாக பேசியது.
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
படிப்பு விவகாரம் காரணமாகவே ஜெயந்த் ரெட்டி மிகவும் மனம் உடைந்திருந்ததாகவும், ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தை 2 முறை அவர் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் என்ன காரணத்திற்காக ஜெயந்த் ரெட்டி தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story