ராணுவ தேர்வு வினாத்தாள் கசிவு: 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புனே,
இந்திய ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்கான பொது நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிந்தது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பற்றி புனே நகர போலீசார் மற்றும் ராணுவ நுண்ணறிவு அமைப்பினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் தொடர்பில் உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ராணுவத்தில் பணி உறுதி என்ற வாக்குறுதியின்படி ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தரும்படி கேட்டுள்ளனர்.
ஒரு சிலர் முன்பணம் ரூ.1 லட்சம் முன்பே கொடுத்து விட்டனர். பணி நிரந்தரம் ஆனவுடன் மீதமுள்ள ரூ.1 லட்சம் பணம் தர முடிவு செய்திருந்தனர்.
இதுபற்றி புனே நகர போலீசின் இணை கமிஷனர் ரவீந்திரா ஷிஸ்வே கூறும்பொழுது, இந்த வழக்கில் 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. 10 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வழக்கு விசாரணையில், ராணுவத்தில் பணிபுரிந்து வரும் 2 அதிகாரிகள் மற்றும் 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளனர். அவர்களில் ராணுவ பயிற்சி மையங்கள் நடத்தியவர்களும் உள்ளனர்.
அவர்களுக்கு எப்படி ராணுவ ஆள்சேர்ப்புக்கான வினாத்தாள் கிடைத்தது என்பது பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வேறு யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story