வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக மந்திரி


வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக மந்திரி
x
தினத்தந்தி 3 March 2021 3:55 AM IST (Updated: 3 March 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் கொரோனா தடுப்பூசியை வீட்டில் வைத்து போட்டு கொண்ட கர்நாடக மந்திரி பி.சி.பட்டீலால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

சீனாவில் உள்ள உகான் நகரில் உருவான கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பல உயிர்களை பலி வாங்கி உள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

2-வது கட்டமாக போலீஸ்காரர்கள் உள்பட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 3-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டார். மேலும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாமல் கர்நாடக மந்திரி ஒருவர் வீட்டில் வைத்தே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் விவசாய துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் பி.சி.பட்டீல். இவரது வீடு ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் டவுனில் அமைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள், செவிலியர்களை தனது வீட்டிற்கு வரவழைத்த மந்திரி பி.சி.பட்டீல் தனது வீட்டில் வைத்தே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். மேலும் அவரது மனைவிக்கும் வீட்டில் வைத்தே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மந்திரி பி.சி.பட்டீல், நானும், எனது மனைவியும் இரேகெரூரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து உலக நாடுகள் பாராட்டி வரும் நிலையில், சிலர் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மந்திரி பி.சி.பட்டீல் வீட்டில் வைத்தே கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

இந்த புகைப்படத்தை பார்த்த பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்கூட்டியே பதிவு செய்து மக்கள் காத்து கொண்டு இருக்கும் நிலையில், மந்திரி பி.சி.பட்டீல் மட்டும் தனது வீட்டிற்கே டாக்டர்களை வரவழைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதி இதுபோன்று செய்வது சரியல்ல என்று கருத்துகளை பதிவிட்டு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபோல மந்திரி பி.சி.பட்டீலின் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.

மந்திரி பி.சி.பட்டீல் வீட்டில் வைத்து தடுப்பூசி செலுத்தியது குறித்து ஹாவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ராஜேந்திர தொட்டமணி கூறும்போது, மந்திரி பி.சி.பட்டீல் வீட்டில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து டாக்டர்கள், நர்சுகளிடம் விசாரிக்கப்படும் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மந்திரி பி.சி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ,மந்திரிகளுக்கு என்று சில சிறப்பு சலுகைகள் உள்ளன. அந்த சலுகை அடிப்படையில் தான் வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டேன். இதில் எந்த தவறும் இல்லை." என்றார். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story