கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை 81 சதவீத செயல்திறன் கொண்டது - பாரத் பயோடெக் தகவல்
கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை 81 சதவீத செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் தகவல் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்,
இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடைவதற்கு முன்பே, அவசர கால தேவைகளுக்கு மருந்தை பயன்படுத்த, நிபந்தனைகளுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி வழங்கியது. அதன்படி, நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 25,800 நபர்களிடம் நடத்தப்பட்டுவரும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளதாகவும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 80.6 சதவீத இடைக்கால செயல்திறனை கோவாக்சின் நிரூபித்துள்ளதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
கோவாக்சின் மருந்து கொரோனாவுக்கு எதிராக உயர் மருத்துவ செயல்திறனை நிரூபித்திருப்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் உருமாறிய வைரசுக்கு எதிரான குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது என்று பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறினார்.
இறுதிக்கட்டமாக 5 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் மருந்தை செலுத்தி பரிசோதனை செய்வதற்காக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை பாரத் பயோடெக் அணுகி உள்ளது. இந்த சூழ்நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
COVAXIN has demonstrated an interim vaccine efficacy of 81% in its Phase 3 clinical trial. The trials involved 25,800 subjects, the largest ever conducted in India, in partnership with ICMR: Bharat Biotech pic.twitter.com/jDIka9LIEE
— ANI (@ANI) March 3, 2021
Related Tags :
Next Story