டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே தொடர மக்கள் விரும்புகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே தொடர மக்கள் விரும்புகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 3 March 2021 8:36 PM IST (Updated: 3 March 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே தொடர மக்கள் விரும்புகிறார்கள் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சியில் உள்ள சவுகான் பங்கர், ரோகினி, ஷாலிமர்பாக், திரிலோக்புரி மற்றும் கல்யாணபுரி ஆகிய 5 வார்டுகளில் கடந்த பிப்ரவரி 28ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி இறுதி முடிவுகள் மாலை 5 மணிக்கு வெளியானது. இதில், 4 இடங்களில் ஆம்ஆத்மி கட்சியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. பாஜக 5 இடத்திலும் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் டெல்லி மாநகராட்சியின் 5 வார்டு இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியில் வெற்றி குறித்து ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

இடைத்தேர்தலில் இந்த வெற்றி, ஆம் ஆத்மி கட்சியின் பணியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை காட்டுகிறது. 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 70க்கு 67 இடங்களில் வெற்றி பெற்றோம்.

 2020 தேர்தலில் 62 இடங்களில் வெற்றி அடைந்தோம். இப்போது மாநகராட்சி இடைத்தேர்தலில் 5ல் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சியே மாநிலத்தில் தொடர வேண்டும் என மக்கள் விரும்புவது தெரிகிறது. 

பாஜக அனைத்து இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. அவர்களின் 15 ஆண்டு பணியில் மக்கள் மிகவும் கவலை அடைந்ததை இது காட்டுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story