69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: அரசியல்சாசன அமர்வு விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


69 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: அரசியல்சாசன அமர்வு விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 4 March 2021 6:15 AM IST (Updated: 4 March 2021 6:15 AM IST)
t-max-icont-min-icon

69 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியல்சாசன அமர்வு விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் சி.வி.காயத்ரி உள்ளிட்டோர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களை மராத்தா ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரித்து வரும் அரசியல்சாசன அமர்வு மாற்ற வேண்டிய தேவையில்லை என கருதுகிறோம். இந்த விவகாரம் தொடர்புடைய ரிட் மனுக்களை மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகு விசாரிக்கிறோம்.

இதன்படி, தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களை மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரித்து வரும் அரசியல்சாசன அமர்வு மாற்ற கோரிய இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து முடித்து வைக்கிறோம்’ என உத்தரவிட்டனர்.

Next Story