பணியில் அலட்சியமாக இருந்தால் இரக்கமின்றி நடவடிக்கை - தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை கமிஷனர் எச்சரிக்கை
பணியில் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தால் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நடைபெறவுள்ள 5 மாநில சட்டசபை பொதுத்தேர்தல்களை முன்னிட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் இந்திய தேர்தல் கமிஷனின் தலைமை கமிஷனர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் கமிஷனர்கள், அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 மாநிலங்களிலும் நியமிக்கப்பட்ட 1,650-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 120-க்கும் மேற்பட்ட தொலைதூர இடங்களில் இருந்து காணொலி வாயிலாகவும், நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது கூறியதாவது,
“தேர்தல்களில் தேர்தல் பார்வையாளர்கள் மிக முக்கியமானவர்கள். தனது பதவிக்காலத்தில் 14 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பார்வையாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும், கொரோனா பரவல் காலத்தில் நடத்தப்பட்ட பீகார் சட்டசபை தேர்தல் இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். முந்தைய தேர்தல்களைவிட இந்த தேர்தலில் அங்கு வாக்காளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க பார்வையாளர்கள் உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு செய்யப்பட்ட வசதிகளை சரிபார்க்க பார்வையாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும். வாக்காளர்களை பாதுகாப்பாக வாக்களிக்கச் செய்வதே தேர்தல் கமிஷனின் நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் தங்களது பணிகளில் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தால் தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது. அவர்கள் மீது இரக்கமின்றி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா பேசும்போது, “இந்த தேர்தலில் 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது உரிமையை பயன்படுத்துவார்கள். தேர்தல்பார்வையாளர்கள், பதற்றமான பகுதிகளில் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பணம், மதுபானம் மற்றும் இலவசங்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கள அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்றார்.
தேர்தல் கமிஷனின் பொதுச்செயலாளரும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான உமேஷ் சின்கா, தேர்தல் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றி விளக்கினார். இதுபோல பிற மாநிலங்களின் பொறுப்பாளர்களும் அந்தந்த மாநில அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
Related Tags :
Next Story