டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதிக்கு தடுப்பூசி
டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி உள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் 1-ந் தேதி தொடங்கி இருக்கிறது.
தடுப்பூசியின் இரண்டாவது கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்சவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
3-வது நாளான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு தன்மகளுடன் சென்றார். அங்கு அவருக்கு நர்சு ஒருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்.
வரலாற்றில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு காரணமாக அமைந்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார். தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தைகாட்டில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது நல்லதொரு அனுபவம். கவலைப்பட ஏதுமில்லை” என குறிப்பிட்டார். அவரது மனைவி கமலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கோவா முதல்-மந்திரி பிரமோத் சவந்த், வட கோவாவில் சங்காலியில் உள்ள பொது சுகாதார மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். “தகுதிவாய்ந்த மக்கள் முன்வந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் நேற்று புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் 1-ந் தேதியே தடுப்பூசி போட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகரும், ஹர்தீப் சிங் புரியும் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் அடங்குவார்கள்.
Related Tags :
Next Story