ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக மந்திரி ராஜினாமா


ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 4 March 2021 6:41 AM IST (Updated: 4 March 2021 6:41 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து கர்நாடக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பதவியை ராஜினாமா செய்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இளம் பெண்ணுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக அவர் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதனால் எக்காரணம் கொண்டும் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் கூறினார். மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்ய கோரி எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் நேற்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் ரமேஷ் ஜார்கிகோளியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலிட பொறுப்பாளர் அருண்சிங், ரமேஷ் ஜார்கிகோளியிடம் மந்திரி பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை அவர் நேற்று மதியம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடியூரப்பா அதை ஏற்றுக்கொண்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ரமேஷ் ஜார்கிகோளி படுக்கையில் பெண்ணுடன் ஆபாசமாக இருந்தபோது இருவரும் உரையாடினர். அந்த உரையாடல் வெளியாகியுள்ளது.

அதில் எடியூரப்பா பெரும் ஊழல்வாதி என்றும், அடுத்த கர்நாடக முதல்-மந்திரியாக பிரகலாத்ஜோஷி நியமிக்கப்படுவார் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

மேலும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள காங்கிரசை சேர்ந்த சித்தராமையா நல்ல தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Next Story