தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு கொரோனாவில் இருந்து மீள 1.70 லட்சம் பேர் சிகிச்சை


தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு கொரோனாவில் இருந்து மீள 1.70 லட்சம் பேர் சிகிச்சை
x
தினத்தந்தி 4 March 2021 6:57 AM IST (Updated: 4 March 2021 6:57 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை கடந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து வந்தது. நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 12 ஆயிரத்து 286 ஆக குறைந்தது.

ஆனால் நேற்று மீண்டும் வைரஸ் பாதிப்பின் அளவு, 15 ஆயிரத்தை எட்டியது. சரியாக 14 ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

நேற்று முன்தினம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 220 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இந்த பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியம், கேரளா, கோவா, சண்டிகார், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் வாராந்தர கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியான 2 சதவீதத்தை விட அதிகம் ஆகும். மராட்டியத்தில் இந்த அளவு, 10.02 சதவீதமாக இருக்கிறது.

நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 464 பேர் குணம் அடைந்தனர். ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை, 13 ஆயிரத்து 123 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 6,332 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 3,512 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 97.06 சதவீதமாக உள்ளது.

பலி தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் 100-க்குள் அடங்கியது. நேற்று 98 பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்களில் 54 பேர் மராட்டிய மாநிலத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 16 பேரும், பஞ்சாப்பில் 10 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

அந்தமான் நிகோபார், ஆந்திரா, அருணாசலபிரதேசம், அசாம், பீகார், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, டெல்லி, கோவா, இமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 24 மாநிலங்களில் ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் அம்சம் ஆகும்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்புவிகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. கொரோனா உயிர்ப்பலியில் மராட்டியம், முதல் இடத்தில் தொடர்கிறது. அங்கு 52 ஆயிரத்து 238 பேர் இறந்துள்ளனர். அடுத்த நிலையில் தமிழகம் நீடிக்கிறது. 3-வது இடத்தில் கர்நாடகம் (12 ஆயிரத்து 343 பேர்) தொடர்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கூடி இருக்கிறது. 1.5 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தற்போது தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று இந்த எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டியது. மொத்தம், 1 லட்சத்து 70 ஆயிரத்து 126 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இது மொத்த பாதிப்பில் 1.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது கவலை அளிக்கும் அம்சமாகவே இருக்கிறது.

கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு அம்சங்களை ஒவ்வொருவரும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

Next Story