உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை - ஐ.நா. தகவல்


உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை - ஐ.நா. தகவல்
x
தினத்தந்தி 4 March 2021 8:20 AM IST (Updated: 4 March 2021 8:20 AM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அப்போது முதலே பள்ளிகள் அடைக்கப்பட்டன. எனினும் பின்னர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது பல நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விலக்கி, பள்ளி-கல்லூரிகளை திறந்தாலும் முழு அளவில் கல்விக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதாவது அனைத்து மாணவ-மாணவிகளும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் உருவாகவில்லை.

இவ்வாறு பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதில் 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த சுமார் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பள்ளிகள் மூடியே உள்ளன. இதனால் 9.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது.

Next Story