உலக டாப் 100 தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்
நடப்பு ஆண்டுக்கான உலக டாப் 100 பல்கலை கழகங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்று உள்ளன.
புதுடெல்லி,
மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங், கியூ.எஸ். உலக பல்கலை கழக தரவரிசை 2021க்கான பட்டியலை வெளியிட்டு இன்று பேசினார். அதில், கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சிக்கான தொடர்ச்சியான கவனம் மற்றும் இந்திய உயர் கல்வியில் சீர்திருத்தம் ஆகியவற்றை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவால், இந்திய கல்வி நிலையங்களின் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் அடைந்து, உலக அளவில் புகழடைந்து, கியூ.எஸ். போன்ற மதிப்புமிக்க தரவரிசையையும் பெற்றுள்ளன.
இந்த தரவரிசை மற்றும் தரமதிப்பீடு, சர்வதேச சிறப்பு வாய்ந்த நிலையை நோக்கி செல்ல ஊக்கமளிக்கும் வகையில் இந்திய கல்வி நிலையங்களிடையே ஆரோக்கிய போட்டியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இதன்படி, உலக டாப் 100 தரவரிசையில், பாம்பே ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி., காரக்பூர் ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.எம்., ஆமதாபாத் ஐ.ஐ.எம்., ஜே.என்.யூ., அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் சென்னை ஐ.ஐ.டி.யானது பெட்ரோலிய என்ஜினீயரிங் பிரிவில் உலக அளவில் 30வது தரவரிசையை பிடித்து உள்ளது. உலக அளவில் பாம்பே ஐ.ஐ.டி. 41வது இடமும், ஐ.ஐ.டி. காரக்பூர் தாது பொருட்களுக்காக 44வது இடமும் பிடித்து உள்ளன.
இதேபோன்று டெல்லி பல்கலைக்கழகம் வளர்ச்சி படிப்புகளுக்காக உலக அளவில் 50வது தரவரிசையை பெற்றுள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story