நிர்மலா சீதாராமன், மன்மோகன்சிங் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர் - கவர்னர்கள், முதல்-மந்திரிகளுக்கும் தடுப்பூசி
நிர்மலா சீதாராமன், மன்மோகன்சிங் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கவர்னர்களும், முதல்-மந்திரிகளும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புதுடெல்லி,
60 வயதை கடந்தவர்களுக்கும், பிற நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
முதல் நாளிலேயே பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அடுத்தடுத்து பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில், நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்ட நர்சு ரம்யாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் இருக்க அதிர்ஷ்டம் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடைய மனைவி குர்சரண் கவுரும் அங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா, பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
காஷ்மீர் யூனியன்பிரதேச கவர்னர் மனோஜ் சின்கா, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி பாதுகாப்பானது என்று அவர் கூறினார்.
டெல்லி கவர்னர் அனில் பைஜால், அவருடைய மனைவி மாலா பகத் ஆகியோர் டெல்லியில் உள்ள தீரத் ராம்ஷா ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடைய பெற்றோருக்கும் அங்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாகாலாந்து மாநில முதல்-மந்திரி நிபியு ரியோ, தலைநகர் கோகிமாவில் உள்ள நாகா ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவருடைய மனைவி, துணை முதல்-மந்திரி யந்துங்கோ பட்டான், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story