சிறப்பு பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை


சிறப்பு பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
x
தினத்தந்தி 5 March 2021 1:06 AM GMT (Updated: 5 March 2021 1:06 AM GMT)

தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா ஆலோசனை வழங்கி வருகிறார்.

புதுடெல்லி, 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பணியாற்ற வேண்டிய விதம் பற்றி தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா ஆலோசனை வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் அனைத்து பார்வையாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று சிறப்பு பார்வையாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேரடியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு பார்வையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை சுனில் அரோரா வழங்கினார்.

தமிழகத்துக்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலோக் சதுர்வேதி நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதுச்சேரிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மஞ்ஜீத்சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் சேர்த்து சிறப்பு பார்வையாளர்களாக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தர்மேந்திரகுமார், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மதுமகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

Next Story