ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலானது - எடியூரப்பா பேச்சு


ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலானது - எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 5 March 2021 1:12 AM GMT (Updated: 5 March 2021 1:12 AM GMT)

ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டுவருவது மிகப்பெரிய சவாலானது என்று சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதம் நடைபெற்றது. காங்கிரசாரின் கடும் அமளிக்கு இடையே முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

ஒரே தேசம் ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலானது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது குறித்து விரிவான முறையில் விவாதம் நடைபெற்றால் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியும். ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடத்த முடியும். நாாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் காலியாகும் இடங்களை இடைத்தேர்தல் இன்றி நிரப்ப வேண்டும். அத்தகையை முறையை கொண்டு வர வேண்டும்.

உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் வாக்காளர்களின் நலனுக்கு பங்கம் ஏற்படாத வகையில் முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். ஆட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்துவதில் இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் ஆலோசனை மிக முக்கியமானது. சமீப காலமாக தேர்தல்கள் பண பலத்தின் அடிப்படையில் நடைபெறுவது துரதிர்ஷ்டம். தனிமனித பண்புகள், வரலாறு, வேட்பாளர்களின் புகழ், விசுவாசம் ஆகியவை முக்கிய இடம் பெற வேண்டும்.

நேர்மையான, வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறுவதால் கட்சி, வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உண்டாக்கும். ஆழமான ஆய்வு மற்றும் ஆலோசனை, விரிவான விவாதம் நடைபெற வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை பின்பற்றும் நாம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது என்பது கடினமான ஒன்று அல்ல. இந்த நோக்கத்தில் ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story