தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிய வழிகாட்டு விதிமுறைகள்


தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிய வழிகாட்டு விதிமுறைகள்
x
தினத்தந்தி 5 March 2021 8:10 AM IST (Updated: 5 March 2021 8:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசௌ புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து விட்டது.

அதாவது 17,407 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இப்படி அதிக எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு இருப்பது ஒரு மாதத்துக்குப்பிறகு இதுவே முதல் முறையாகும்.

அந்தவகையில் கடந்த ஜனவரி 29-ந்தேதி இந்தியாவில் 18,855 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு தற்போதுதான் இவ்வளவு அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

மராட்டியத்தில் மிகவும் அதிகம்

இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டுமே 9,855 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு கடந்த அக்டோபர் 18-ந்தேதிக்குப்பிறகு இவ்வளவு அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

இதைத்தவிர கேரளாவில் 2,765 பேரும், பஞ்சாப்பில் 772 பேரும் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 85.51 சதவீதம் பேர் மராட்டியம், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 923 ஆகியிருக்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 89 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். இதன்மூலம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 435 பேர் இதுவரை கொரோனாவால் உயிர் விட்டிருக்கின்றனர்.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 42 இறப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அடுத்ததாக கேரளா, பஞ்சாப்பில் முறையே 15 மற்றும் 12 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

எனினும் மத்திய பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் இல்லை.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் இதுவரை கொரோனாவை வென்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 75 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 97.03 சதவீதம் ஆகும். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.

அந்தவகையில் நேற்று காலை நிலவரப்படி 1,73,413 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இது மொத்த பாதிப்பில் 1.55 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறும் நோயாளிகளை பொறுத்தவரை மராட்டியம், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அதேநேரம் கேரளா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களில் மேற்படி 24 மணி நேரத்தில் குறைந்திருக்கின்றன.

தமிழகம் உள்ளிட்ட ஆறுமாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்திருப்பதால் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், மால்களுக்கு புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் மால்களுக்கான புதிய கொரோனா கால வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முகக் கவசம் அணிவதும் தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பதும் இதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே கொரோனா தொற்று பரவல் பாதிப்புக்குரிய அபாயகரமான சூழலில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று பரவக்கூடிய பணிகளில் உள்ள ஊழியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரக்குகள் கொண்டு வர தனி வாயில் அமைக்கவும் உள்ளே நுழையவும் வெளியேறவும் தனி வாயில்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உணவகங்களில் சாப்பிடுவோரை விடவும் உணவு பார்சல்கள் டெலிவரி முறையை ஊக்கப்படுத்துமாறும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்க்கிங் போன்ற இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதே போல் வழிபாட்டுத் தலங்களிலும் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல், சானிட்டைசர் சோப்பு போன்றவற்றைப் பயன்படுத்துதல், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டும் அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா, மராட்டியம், கர்நாடகா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

Next Story