தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் பிணமாக மீட்பு


தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 6 March 2021 5:00 AM IST (Updated: 6 March 2021 5:00 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற காரின் உரிமையாளர் பிணமாக மீட்கப்பட்டார்.

மும்பை, 

மும்பையில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் 27 மாடி அண்டிலா வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கடந்த மாதம் 25-ந் தேதி 2½ கிலோ ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் இருந்து முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்த கார் தானேயை சேர்ந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஹிரேன் மன்சுக்கின் கார் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். வெடிப்பொருட்களுடன் கார் சிக்கியதை அடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி விளக்கமும் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் ஹிரேன் மன்சுக் நேற்று முன்தினம் இரவு திடீரென மாயமானார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், மும்ரா ரெட்டி பந்தர் என்ற பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மர்மச்சாவு தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Next Story