மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் மம்தா பானர்ஜி நந்திகிராமில் போட்டி - 2 மந்திரிகளுக்கு வாய்ப்பு மறுப்பு


மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் மம்தா பானர்ஜி நந்திகிராமில் போட்டி - 2 மந்திரிகளுக்கு வாய்ப்பு மறுப்பு
x
தினத்தந்தி 6 March 2021 5:06 AM IST (Updated: 6 March 2021 5:06 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். 2 மந்திரிகள் உள்பட 20 எம்.எல்.ஏ.களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 294 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 29-ந் தேதி வரை 8 கட்ட தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ‘நீயா, நானா?’ என்ற அளவுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி தனது கட்சி போட்டியிடுகிற 291 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கொல்கத்தாவில் நேற்று வெளியிட்டார். அவர் இந்த முறை தனது பவானிபூர் தொகுதியில் களம் இறங்கவில்லை. தொகுதி மாறுகிறார். அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதி, மம்தா கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், போக்குவரத்து மந்திரியாக இருந்தவருமான சுவெந்து அதிகாரியின் தொகுதி ஆகும். அவர் கடந்த டிசம்பரில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டது நினைவுகூரத்தக்கது. மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் உள்ளூர்வாசியான மின்சார துறை மந்திரி சொவன்தேப் பானர்ஜியை நிறுத்துகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பார்த்தா சட்டோபாத்யாய், அமித் மித்ரா ஆகிய 2 மந்திரிகள் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

80 வயது கடந்தவர்களுக்கும் வாய்ப்பு இல்லை.

வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 முஸ்லிம்கள், 79 தாழ்த்தப்பட்ட இனத்தவர், 17 பழங்குடியினர் ஆகியோருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி 3 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளார்.

Next Story