நாடு முழுவதும் 1.80 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன - சுகாதார அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் 1.80 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஜனவரி 16-ந்தேதி இந்தியா தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்களில் நடந்து வரும் இந்த தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நேற்று காலை வரை 1.80 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
அந்தவகையில் 68,53,083 சுகாதார பணியாளர்கள் (முதல் டோஸ்), 31,41,371 சுகாதார பணியாளர்கள் (2-வது டோஸ்) பெற்றிருக்கின்றனர். இதைப்போல 60,90,931 முன்கள வீரர்கள் (முதல் டோஸ்), 67,297 முன்கள வீரர்கள் (2-வது டோஸ்) தடுப்பூசி போட்டிருக்கின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பொறுத்தவரை 16,16,92 பேர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் 2,35,901 பேர் முதல் டோஸ் பெற்றிருக்கின்றனர்.
இதில் 48-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 13,88,170 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதில் 10,56,808 பயனாளிகள் முதல் டோசும், 3,31,362 பயனாளிகள் 2-ம் டோசும் பெற்றுள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story