2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நர்சுக்கு கொரோனா பாதிப்பு
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நாக்பூரை சேர்ந்த நர்சுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் காம்டி அரசு ஆஸ்பத்திரியில் 42 வயது நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார். பின்னர் பிப்ரவரி 18-ந் தேதி 2-வது டோஸ் தடுப்பு மருந்தும் நர்சுக்கு செலுத்தப்பட்டது. இந்தநிலையில் நர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று அறிகுறிகள் தெரிந்தது.
எனவே மார்ச் 2-ந் தேதி அவர்களுக்கு விரைவு பரிசோதனையான ஆண்டிஜன் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நர்ஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
நேற்று முன்தினம் நர்சு மற்றும் குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தீபக் செலோகர் உறுதிப்படுத்தினார்.
மும்பையில் சமீபத்தில் முதல் டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு டாக்டர் மற்றும் சுகாதாரப்பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் 2 -வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 12 நாட்களுக்கு பிறகும் நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story