மேற்கு வங்காளம்: பாஜக தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீச்சு - 6 பேர் காயம்
மேற்கு வங்காளத்தில் பாஜக தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் கட்சிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த சிலர் அவர்கள் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் பாஜக தொண்டர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் நடத்தப்பட்டது என பாஜக குற்றம்சுமத்துகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story