சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாளை போராட்டம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு


சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாளை போராட்டம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2021 5:44 PM IST (Updated: 6 March 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்குவங்க அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார். தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து, தனது பிரசார நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், மம்தா பானர்ஜி இன்று டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிஹூரி நகருக்கு சென்றார். பக்டோஹ்ரா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, 'சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிலிஹூரி நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். கியாஸ் சிலிண்டர்களை சுமந்து பேரணியாக சென்று எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்’ என கூறினார்.

Next Story