இந்தியாவில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு; 18 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு; 18 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 March 2021 2:45 AM IST (Updated: 7 March 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரஸ்பரவல் தொடர்ந்து அதிகரிக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18 ஆயிரத்தை கடந்துவிட்டது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தினமும் அதிகரித்தவண்ணமாக உள்ளது. 10 ஆயிரத்துக்கு கீழே வந்த கொரோனா இப்போது கடந்த இரு வாரங்களாக ஏறுமுகம் கண்டு வருகிறது. 15 ஆயிரம், 16 ஆயிரம், 17 ஆயிரம் என அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 18 ஆயிரத்து 327 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவானது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 7 லட்சத்து 51 ஆயிரத்து 935 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அளவு பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கும் அம்சமாக மாறி வருகிறது.

நேற்று புதிதாக கொரோனா தாக்குதலுக்கு ஆளான 18 ஆயிரத்து 327 பேரில் 82 சதவீதத்தினர் மேலே குறிப்பிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை, 1 கோடியே 11 லட்சத்து 92 ஆயிரத்து 88 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பது போவே, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக இந்த கொடிய வைரசின் பிடியில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 819 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கையானது 14 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில், 6,467 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். கேரள மாநிலத்தை பொறுத்தமட்டில் 3,638 பேர் நலம் அடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை என்பது 1 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 128 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா மீட்பு விகிதம், 96.98 சதவீதமாக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 113 பேர் பலியான நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 108 ஆக பதிவாகி இருக்கிறது. மராட்டியத்தில் மட்டுமே 53 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 16 பேரும், பஞ்சாப்பில் 11 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 656 ஆக அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக தொடர்கிறது.

நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், அசாம், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மத்தியபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம் ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல், ஆறுதலான தகவலாக அமைந்துள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும், கொரோனா மீட்புக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.61 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.50 சதவீதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதுவும் கவலை அளிக்கத்தக்க ஒன்றாகவே அமைந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சியப்போக்கும், பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும், திருமணம் போன்ற விழாக்களில் பங்கேற்பதில் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடருவதும் தினசரி கொரோனா பாதிப்புக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் காட்டுகிற ஆர்வத்தை கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் தொடர்ந்து மக்கள் பின்பற்றினால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது.


Next Story