100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்; அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டிய நிலையில், அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் விவசாயிகள் மறியல் நடத்தினர்.
சண்டிகர்,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.
இதையொட்டி நேற்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கவும், நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தவும் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை மறியல் நடந்தது.
அரியானாவில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையான குண்ட்லி-மனேசர்-பல்வால் 6 வழி சாலையில் பல இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளுக்கு மாற்றாகவும், தலைநகருக்குள் லாரிகளை வரவிடாமல் புறவழியாக இயக்குவதற்காகவும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. எப்போதும் வாகன நெரிசலாக காணப்படும் இந்த சாலையில் விவசாயிகளின் மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைப்போல அரியானாவின் பல பகுதிகளில் விவசாயிகள் தர்ணா போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த 3 சட்டங்களை திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், இதில் இருந்து ஒருபோதும் பின் வாங்கமாட்டோம் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை எட்டிய பிறகும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், ‘யாருடைய மகன்கள் இந்த நாட்டு எல்லைகளில் உயிரை பணயம் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு டெல்லி எல்லைகளில் ஆணிகள் போடப்பட்டிருக்கின்றன. நாட்டுக்கே உணவளிப்பவர்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள், ஆனால் அரசோ அட்டூழியங்களை செய்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் தளத்தில், ‘தங்கள் உரிமை, மரியாதைக்காக போராடும் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது. காந்தி, படேல், நேரு, சாஸ்திரி, பகத் சிங் காட்டிய பாதையில் போராடுகிறார்கள். பா.ஜனதா அரசின் ஆணவத்தின் 100 நாட்கள்’ என சாடியிருந்தார்.
இதைப்போல கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.
விவசாயிகள் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டிய நிலையில், டுவிட்டர் தளத்தில் ‘பா.ஜனதா அரசின் ஆணவத்தின் 100 நாட்கள்’ என்ற ஹேஷ்டெக் வைரலானது.
Related Tags :
Next Story