முன்னாள் ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி, பா.ஜ.க.வில் சேர்ந்தார்
மன்மோகன் சிங் மந்திரிசபையில் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்த தினேஷ் திரிவேதி, பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் தினேஷ் திரிவேதி. இவர் 2011-12 காலகட்டத்தில் மத்தியில் மன்மோகன் சிங் மந்திரிசபையில் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த இவர், கடந்த மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அவர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வுக்கு புகழாரம் சூட்டி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “இந்த பொன்னான தருணத்துக்காக காத்திருந்தேன். சில கட்சிகளில் குடும்பம்தான் பெரிது, ஆனால் பா.ஜ.க.வில் மனிதர்கள்தான் பெரிது” என குறிப்பிட்டார்.
70 வயதான தினேஷ் திரிவேதி, மம்தாவின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக திகழ்ந்தவர், தற்போது மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள தருணத்தில் அவர் கட்சி தாவி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story