கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2021 7:16 AM IST (Updated: 7 March 2021 7:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்காவிட்டாலும்கூட, பல மாநிலங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த மாநிலங்களின் சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத் கே பால் ஆகியோர் நேற்று காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.

கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், பாதிப்பு உறுதி செய்யப்படுகிற ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்த 20 பேரையாவது கண்டறிய வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. ‘டெஸ்ட், டிராக், டிரீட்’ (கொரோனா பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை) என்பதில் இந்த மாநிலங்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் உள்ள குழுவினருக்கு தடுப்பூசிகளை போடுவதை விரைவுபடுத்த வேண்டும், குறைந்தது 15 நாள் முதல் அதிகபட்சம் 28 நாள் வரையிலான தடுப்பூசி அட்டவணையை தயார் செய்வதற்கு தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

Next Story