திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும் - சுவேந்து அதிகாரி பேச்சு


திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும் - சுவேந்து அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 7 March 2021 10:39 AM IST (Updated: 7 March 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும் என நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாஜக முதல்கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி பாஜக-வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிட உள்ளார். 

இந்நிலையில், நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரி தான் போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட முஷிபரா பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ’ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் காஷ்மீராக மாறிவிடும்’ என்றார்.     

இதற்கிடையில், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் அம்மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம் சிலிஹூரி நகரில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story