திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார்
நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்தி இன்று பாஜகவில் இணைந்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் - இடது சாரிகள் - இந்திய மதசார்பற்ற முன்னணி கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதேவேளை ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு மாறும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக 2 ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. 70 வயதான இவர் 2014 முதல் 2016 வரை எம்.பி.யாக செயல்பட்டு வந்தார். அதன் பின் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்தி தற்போது மீண்டும் அரசியலில் நுழைந்துள்ளார். அவர் பாஜக சார்பில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேஷ் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மிதுன் சக்கரவர்த்தி மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ், பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மிதுன் சக்ரவர்த்தி மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story