மேற்குவங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
மேற்குவங்காளத்தில் பாஜக-வுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கொல்கத்தா,
தமிழகம், கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக, 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெறுகிறது. இறுதிகட்டமான 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
மேற்குவங்காளத்தை பொறுத்தவரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் - இடதுசாரிகள் - இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், பாஜக-வுக்கு ஆதரவு கேட்டு அம்மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்று வரும் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
பிரசார கூட்டத்தில் தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பிரசார நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் அம்மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம் சிலிஹூரியில் பேரணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story