திரிணமுல் காங்கிரஸ் கட்சியாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது - சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு


திரிணமுல் காங்கிரஸ் கட்சியாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது -  சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 March 2021 7:41 PM IST (Updated: 7 March 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி ரோஹிங்கியாக்களின் அத்தை என்று பாஜகவின் நந்திகிராம் வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்தார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக, மற்றும் இடதுசாரிகள் - காங்கிரஸ் - இந்திய மதசார்பற்ற முன்னணி கூட்டணி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில் பாஜக-வுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி பேசுவதற்கு முன் நந்திகிராம் பாஜக வேட்பாளரும், திரிணமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி ஆகியவை மேற்கு வங்கத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து துண்டாட முயல்கின்றன. திரிணமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம், காஷ்மீராக மாறிவிடும். காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினருக்கு என்ன நடக்குமோ அதுதான் இங்கு உங்களுக்கும் நடக்கும்.

மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள் தான் தேவை. ஆனால், மம்தாவை இந்த மக்கள் சொந்த மகளாக ஏற்கமாட்டார்கள். நீங்கள் ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின் அத்தை. திரிணமுல் காங்கிரஸ் கட்சியாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா தான் நிறுவனத்தின் தலைவர். ஊழல் படிந்த அவரின் மருமகன் தான் இயக்குநர்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், நிலக்கரி கடத்தல், பசுக்கடத்தல் ஆகியவற்றில் பணத்தைக் கொள்ளையடித்தார்கள் அவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story