நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்2- வது அமர்வு தொடங்கியது
பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் சபை முடங்கியது. முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.
இந்த அமர்வின் முக்கிய நோக்கம், 2021-22 நிதி ஆண்டுக்கான பல்வேறு மானியங்களுக்கான கோரிக்கைகளை, நிதி மசோதாவுடன் நிறைவேற்றுவதாகும். அத்துடன் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
மறைந்த தற்போதைய மக்களவையின் உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கப்படி நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்காமல், சிறிது நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசினார்.
Related Tags :
Next Story