திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பாஜக-வுக்கு தாவல்


திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பாஜக-வுக்கு தாவல்
x
தினத்தந்தி 8 March 2021 5:23 PM IST (Updated: 8 March 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும் இன்று பாஜக-வில் இணைந்தனர்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்து வருகின்றனர். 

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹபிப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சரளா முர்மு. அவர் இன்று திடீரென பாஜக-வில் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் அவர்கள் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சரளா முர்மு பாஜக-வுக்கு தாவுவதாக தகவல்கள் பரவிய சில மணி நேரங்களில் ஹபிப்பூர் தொகுதிக்கு பிரதீப் பாஸ்கியை வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. உடல்நலக்குறைவு காரணாமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சரளா முர்முவை திரும்பப்பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. 

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நபர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இந்த சம்பவம் மேற்குவங்காள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


Next Story