இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை - மம்தா பானர்ஜி ஆவேசம்
இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி ஒன்றை நடத்தினார். மத்திய கொல்கத்தாவில் உள்ள கல்லூரி சதுக்கத்தில் தொடங்கிய பேரணி, 5 கி.மீ. தொலைவில் உள்ள டோரினா கிராஸிங்கில் முடிவடைந்தது.
பேரணியில் மமதா பானர்ஜி பேசும் போது கூறியதாவது:-
'மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வென்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன். 294 தொகுதிகளிலும் எனக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.
பாஜக தலைவர்கள் தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டுமே மேற்கு வங்காளத்துக்கு வருகிறார்கள், பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து மோடி பேசுகிறார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு என்ன?
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் வழங்கப்படும் சான்றிதழில் மோடி படம் இருக்கிறது. இந்த நாட்டுக்கே மோடியின் பெயர் வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, இரவு நேரத்தில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். ஆனால், நான் கேட்கிறேன். மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா இருவரும் பாஜக ஆளும் மாநிலங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். குறிப்பாக மாதிரி மாநிலமாக இருக்கும் குஜராத்தைக் கவனிக்க வேண்டும் இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Related Tags :
Next Story