பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் முதல் நாளிலேயே முடங்கியது


பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் முதல் நாளிலேயே முடங்கியது
x
தினத்தந்தி 9 March 2021 5:06 AM IST (Updated: 9 March 2021 5:06 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

புதிய எதிர்க்கட்சி தலைவர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது.

காலையில் மாநிலங்களவை கூடியவுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா உள்ளிட்டோரின் மறைவுக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து குலாம்நபி ஆசாத் ஓய்வு பெற்றதால், புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பரந்த அனுபவம், மாநிலங்களவையை சுமுகமாக வழிநடத்த உதவும் என்று சபைத்தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

பெண்கள் தின விவாதம்

கூட்டத்தொடரின் 3 வார கால இடைவெளியின்போது, பட்ஜெட் குறித்த ஆய்வில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெண்கள் தினத்தையொட்டி சிறப்பு விவாதம் நடைபெற்றது. அதில், சிவசேனா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் பேசினர். நாடாளுமன்றத்தில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பிரியங்கா சதுர்வேதி வலியுறுத்தினார்.

காங்கிரஸ் நோட்டீஸ்

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி சபை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார். ஆனால், சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அதை ஏற்கவில்லை.

அதுபற்றி நிதி ஒதுக்க மசோதா மீதான விவாதத்தில் தாராளமாக பேசுமாறு அவர் அறிவுறுத்தினார்.

ஆனால், இது ‘பற்றி எரியும் பிரச்சினை’ என்பதால், இப்போதே விவாதிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு பெட்ரோல் விலை 820 சதவீதமும், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 258 சதவீதமும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், உற்பத்தி வரி மூலம் மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒத்திவைப்பு

இருப்பினும், கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். அதை ஏற்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடத் தொடங்கினர். அவர்களை இருக்கைக்கு திரும்புமாறு கூறியும் கேட்காமல், கோஷமிட்டபடியே இருந்தனர். இதையடுத்து, சபையை காலை 11 மணி வரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.

காலை 11 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். மல்லிகார்ஜுன கார்கேவும் அந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.

மீண்டும் பழைய நேரம்

அப்போது, சபைத்தலைவர் இருக்கையில் இருந்த துணைத்தலைவர் ஹரிவன்ஷ், சபைத்தலைவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று கூறி, கோரிக்கையை நிராகரித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், சபை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1 மணிக்கு சபை கூடியபோதும், அமளி நீடித்ததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், மாநிலங்களவை பழைய நேரப்படி செயல்படும் என்று சபைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று அவர் கூறினார்.

மக்களவை

நாடாளுமன்ற மக்களவை நேற்று மாலை 4 மணிக்கு கூடியது. சமீபத்தில் காலமான 2 எம்.பி.க்கள் மற்றும் 7 முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாலை 5 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

5 மணிக்கு சபை கூடியபோது, பெண் எம்.பி.க்கள் உள்பட அனைத்து பெண்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துகளை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண்கள் தினத்தையொட்டி, சபையை பெண் உறுப்பினர்களே நடத்த வேண்டும் என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து விவாதம் நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகள் வந்திருப்பதாகவும், அந்த பிரச்சினை குறித்து நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.

பெண் எம்.பி.க்கள் விவாதம்

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. உடனே விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பெண் அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதாக சபாநாயகர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை.

இதனால், சபையை இரவு 7 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

இரவு 7 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி. ரமா தேவி சபையை நடத்தினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து பெண் எம்.பி.க்கள் பேசினர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 20 நிமிடங்கள் விவாதம் நடந்தது.

சபையை நடத்த விடுமாறு ரமா தேவி கேட்டுக்கொண்டார். இருப்பினும் அமளி நீடித்ததால் சபை இன்று காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 


Next Story