மும்பை,தானேயில் நீர்வழி போக்குவரத்து; வீடு வாங்கும் பெண்களுக்கு சலுகை; மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு
வீடு வாங்கும் பெண்களுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் 1 சதவீத சலுகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரி உயர்வு காரணமாக மதுபானங்கள் விலை உயரும்.
மராட்டியத்தில் சிவசேனாவை சேர்ந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடந்து வருகிறது.
2-வது பட்ஜெட்
இந்த கூட்டணி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் 2-வது பட்ஜெட் ஆகும். நிதி இலாகாவை கவனிக்கும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூட்டணி அரசு தரப்பில் அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.பட்ஜெட்டில் வரி வருவாயை விட செலவினம் அதிகமாக காட்டப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்து 226 கோடி வருவாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பெண்களுக்கு சலுகை
* வீட்டின் அடையாளமாக பெண் உள்ளார். எனவே அந்த வீட்டின் உரிமையை அவர் எதிர்பார்ப்பதில் தவறில்லை. எனவே பெண்களின் பெயாில் வீடு பத்திரப்பதிவு செய்யப்படும் போது முத்திரைத்தாள் கட்டணத்தில் பெண்களுக்கு 1 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் அரசுக்கு ரூ.1,000 கோடி இழப்பீடு ஏற்படும்.
* மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் மாணவிகள் இலவசமாக பள்ளி செல்லலாம். இதன் மூலம் கிராமப்புற மாணவிகள் பயன்பெறுவார்கள்.
* விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும்.
மதுபானங்கள் மீது வரி
* மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்படுகிறது. அதன்படி பிராண்டடு மதுபானங்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 220 சதவீதம் அல்லது லிட்டருக்கு ரூ.187 வரி வதிக்கப்படும். இதில் எது அதிகமோ அது விதிக்கப்படும்.
பிராண்டடு அல்லாத மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வாட் வரி 35 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மதுபானங்கள் விலை உயர்கிறது.மதுபானங்கள் மீதான வரி விதிப்பின் மூலம் ரூ.1,800 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
நீர்வழி போக்குவரத்து
* மும்பை, தானே, நவிமும்பையில் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் முதல் கட்டமாக வசாய், கல்யாண் இடையே நீர்வழி போக்குவரத்து திட்டம் மேம்படுத்தப்படும்.
* புனேயில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 170 கி.மீ. நீளத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படும்.
* சிந்துதுர்க், உஸ்மனாபாத், நாசிக், ராய்காட், சத்தாரா ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். இதேபோல பர்பானி, அமராவதியிலும் புதிய
மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் மாநிலத்துக்கு 1,990 இளநிலை மருத்துவப்படிப்பு இடங்கள், 1,000 முதுநிலை இடங்கள், 200 சிறப்பு பிரிவு இடங்கள் கிடைக்கும்.
* கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.58 ஆயிரத்து 748 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
ரெயில் பாதை திட்டம்
*புனே- நாசிக் இடையே ரூ.16 ஆயிரத்து 39 கோடி மதிப்பீட்டில் நடுத்தர அதிவேக ரெயில்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ரெயில் பாதையின் உத்தேச நீளம் 235 கிலோ மீட்டர் ஆகும். இந்த வழித்தடத்தில் புனே, அகமதுநகர் மற்றும் நாசிக் மாவட்டங்களில் 24 ரெயில் நிலையங்கள் அமையும்.
* மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பழைய டீசல் பஸ்கள் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், அவற்றை மாற்றிவிட்டு சி.என்.ஜி. கியாசால் இயங்கும் பஸ்கள் மற்றும் மின்சார பஸ்கள் வாங்கப்படும். அதேபோல பஸ் நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்படும். இதற்காக ரூ,1,400 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story