காங்கிரசாரின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


காங்கிரசாரின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 March 2021 9:59 PM GMT (Updated: 24 March 2021 9:59 PM GMT)

காங்கிரசாரின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு:

காங்கிரசாரின் தொடர் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடும் அதிருப்தி

  கர்நாடக சட்டசபையில் ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி. விவகாரம் குறித்த விசாரணையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை கூடிய சபை மதியம் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் கூடியது. அப்போது, சித்தராமையா எழுந்து, 225 உறுப்பினர்களின் நடத்தை குறித்து மந்திரி சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறினார்.

  அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆர்.வி.தேஷ்பாண்டே, "எனது அரசியல் வாழ்க்கையில் இந்த சபை உறுப்பினர்களை மந்திரி சுதாகர் அவமதித்ததை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை. இது சரியல்ல. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

   ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் பண்டப்பா காசம்பூரும், மந்திரி சுதாகரின் கருத்துக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சுதாகரின் கருத்து சரியல்ல

  அப்போது சபாநாயகர் காகேரி பேசுகையில், "இந்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் இந்த சபையின் கண்ணியத்தை, மரியாதையை காக்க வேண்டியது எனது பொறுப்பு. சபை உறுப்பினர்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புவது, தவறாக பேசுவது என்பது சரியல்ல. மந்திரி சுதாகரின் கருத்து சரியல்ல. அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

  3 மணிக்கு சபை கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் தொடர் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 31-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் காங்கிரசாரின் தொடர் போராட்டத்தால் முன்னதாக இந்த கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை 13 நாட்கள் சபை நடந்துள்ளது. அதில் 4 நாட்கள் காங்கிரசாரின் தர்ணா போராட்டத்தால் சபை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story